இந்தியாவின் முப்படைகளில் உள்ள பணி வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு வழிகாட்டுதல் பயிற்சி

   பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் இந்தியாவின் முப்படைகளில் உள்ள பணி வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு வழிகாட்டுதல் பயிற்சியினை கல்லூரியின் தொழில் முனைவோர் மேலாண்மை மேம்பாட்டு மையம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் மாணவர் மேம்பாட்டு கழகம் ஆகிய அமைப்புகள் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து 24.09.2021 அன்று நடைபெற்றது.

   இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பி.சீனிவாசன் தலைமை தாங்க, முப்படைகளின் வீரர்களின் நல்வாழ்வு அலுவலர் இளங்கோவன் முப்படைகளின் பாதுகாப்பு துறையில் இருக்கும் பல்வேறு பணி வாய்ப்புகள், அந்தப் பணிகளில் இருப்பவர்கள் பெறும் பல்வேறு சலுகைகள் மற்றும் இந்தப் பணிகளில் ஈடுபடுவதினால் நாம் நாட்டுக்கு செய்யும் சேவை, அவற்றினால் ஏற்படும் மன திருப்தி என அனைத்தையும் சுட்டிக்காட்டி கருத்துரை வழங்கினார்.

   தயக்கம்,முயற்சியின்மை,தொடர்புமொழி, பயிற்சி குறைபாடு, அறிவிப்புகள் தெரியாமை போன்ற பல்வேறு காரணிகள் நம் மக்கள் அந்தப் பணிக்கு செல்லாமல் இருப்பதற்கு காரணங்களாக சுட்டி காட்டப்பட்டாலும், இன்று அதனை களையும் விதமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சிறப்பான பயிற்சிகளை அனைத்து மத்திய மாநில தேர்வுகளுக்கும் இலவசமாக நடத்துகின்றது. இன்று பல்வேறு மாவட்டங்களில் இதனைப் பயன்படுத்தி பல மாணவர்கள் பணிவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.

   இதனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களும் சரியாக திட்டமிட்டு நீங்கள் விரும்பும் நல்ல பணியை பெற பயிற்சியைப் பயன்படுத்தி பயனடையுங்கள் எனக் கூறினார்.

   மேலும் பாலிடெக்னிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முப்படையிலும் மற்றும் பொதுத்துறையிலும் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துக் கூறினார்.தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்புத் துறை உதவி இயக்குனர் ரமேஷ் குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேலு, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் விக்னேஸ்வரன் ஆகியோர் மத்திய மாநில அரசுத் துறையில் இருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள் குறித்தும் அந்த பணி வாய்ப்புகளை பெற மேற்கொள்ளவேண்டிய ஆக்கப்பூர்வ பணிகள் குறித்தும் பேசினர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் கடத்தப்படும் பல்வேறு பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினர்.

   முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக அலுவலர் ஏ.வைத்திலிங்கம் வரவேற்றார். இந்த பயிற்சியில் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முதலாமாண்டு இரண்டாமாண்டு மற்றும் மூன்றாம் ஆண்டை சேர்ந்த பல மாணவ மாணவிகள் ஆர்வம் உடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிறைவாக கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் ஏ. அமலோற்பவ செல்வி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

adv banner
Top